செய்திகள்
மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர்

உறுதியான சீர்திருத்தங்களால் பொருளாதாரம் மீண்டு எழும் - ப.சிதம்பரத்துக்கு நிதித்துறை இணை மந்திரி பதில்

Published On 2021-06-02 21:40 GMT   |   Update On 2021-06-02 21:40 GMT
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பெரும்பாலானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தை சீரமைக்க நிபுணர்களின் யோசனைகளை கேட்குமாறும் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
புதுடெல்லி:

உறுதியான சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் மீண்டெழும் என்று ப.சிதம்பரத்துக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பதில் அளித்துள்ளார்.



கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்த முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், கடந்த 40 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இதுதான் இருண்ட ஆண்டு என்று கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பெரும்பாலானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தை சீரமைக்க நிபுணர்களின் யோசனைகளை கேட்குமாறும் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அவரது விமர்சனத்துக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பதில் அளித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

இந்திய பொருளாதாரம் மீண்டெழும் திறன் கொண்டது. மத்திய அரசு உறுதியான சீர்திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது. அவை இந்த சிக்கலான நேரத்திலும் வலிமையான அடித்தளத்தை உருவாக்கி உள்ளன. எனவே, இனிவரும் காலத்தில் இந்திய பொருளாதாரம் மீண்டெழும்.

கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 24.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஆனால், 4-வது காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உறுதியான சீர்திருத்தங்களும், வலிமையான அடித்தளமும்தான் இவ்வளவு வேகமாக பொருளாதாரத்தை மீண்டெழ வைத்துள்ளன.

தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், சிறு, குறு நிறுவனங்கள் மீண்டு வருவது குறித்து ப.சிதம்பரம் சந்தேகம் எழுப்புகிறார். ஆனால், சர்வதேச அமைப்புகள், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 12.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளன. இதன்மூலம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடையும் ஒரே பெரிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

கடந்த நிதியாண்டில் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஏழைகள் கையில் பணத்தை கொடுக்குமாறு ப.சிதம்பரம் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நெல், கோதுமை கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜனதா ஆட்சியில் ரூ.8 லட்சம் கோடி தரப்பட்டுள்ளது. பல்ேவறு தரப்பினருக்கு வங்கிக்கணக்கு மூலம் ரூ.68 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பணம் கொடுப்பதுதானே?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News