செய்திகள்
முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் : ஒடிசா முதல்-மந்திரி கோரிக்கை

Published On 2021-06-02 19:07 GMT   |   Update On 2021-06-02 19:07 GMT
கொரோனாவின் எதிர்கால அலைகளில் இருந்து நமது மக்களை பாதுகாப்பது மற்றும் அவர்கள் பிழைத்திருப்பதற்கான நம்பிக்கையை ஊட்டுவதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவதுதான்.
புவனேஸ்வர்:

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்குமாறு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எடுக்குமாறு எல்லா முதல்-மந்திரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி உள்ள மத்திய அரசு, இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்து உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கையால் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், எனவே மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து வழங்குமாறும் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வலியுறுத்தி உள்ளார்.



இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் இணைத்து (டேக்) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவின் எதிர்கால அலைகளில் இருந்து நமது மக்களை பாதுகாப்பது மற்றும் அவர்கள் பிழைத்திருப்பதற்கான நம்பிக்கையை ஊட்டுவதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவதுதான். ஆனால் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் மாநிலங்களுக்கு இடையேயான போராக இது இருக்கக்கூடாது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி இறக்குமதி செய்ய பல மாநிலங்கள் டெண்டர்களை வெளியிட்டு உள்ளன.

ஆனால் அனுமதி மற்றும் உறுதி போன்றவற்றுக்காக சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மத்திய அரசையே நாடி செல்வது வெளிப்படையாக உள்ளது. மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வினியோகிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதேநேரம் அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க உள்ளூர் உற்பத்தியாளர்களாலும் முடியவில்லை. இத்தகைய சூழலில், மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அவற்றை வழங்குவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும். அதன்மூலம் மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி வழங்குவது மட்டுமே மத்திய அரசின் பணியாக இருக்க வேண்டும். அதேநேரம் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதை பரவலாக்கி, சர்வதேச தடுப்பூசி திட்டத்தை உறுதி செய்யும் வகையில், மாநிலங்களே தங்கள் சொந்த நெறிமுறைகளின்படி தடுப்பூசி போடுவதை முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடமும், சில மாநில முதல்-மந்திரிகளிடமும் பேசியிருக்கிறேன். அந்தவகையில் இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எடுத்து பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் கேட்டுக்கொள்கிறேன். 3-வது அலை வந்து மேலும் பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன் நாம் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் தடுப்பூசியை முதன்மையான முன்னுரிமையாக ஏற்றுக்கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தாவிட்டால் எந்த மாநிலமும் பாதுகாப்பாக இருக்காது.

இவ்வாறு அந்த கடிதத்தில் நவீன் பட்நாயக் குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News