செய்திகள்
எல்லா கடைகளையும் திறக்க அனுமதி

மும்பையில் வணிக வளாகங்களை தவிர்த்து எல்லா கடைகளையும் திறக்க அனுமதி

Published On 2021-06-01 02:02 GMT   |   Update On 2021-06-01 02:02 GMT
வணிக வளாகம், ஷாப்பிங் சென்டர்கள் தவிர்த்து தனியாக உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மும்பை, :

மராட்டியத்தில் வருகிற 15-ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளையும் நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி உத்தரவ் தாக்கரே அறிவித்தார். அப்போது காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் தனிக்கடைகளை திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் முதல்-மந்திரி அறிவித்தார்.

இந்தநிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மும்பை, புனேயில் அனைத்து வகையான கடைகளையும் திறக்க மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வணிக வளாகம், ஷாப்பிங் சென்டர்கள் தவிர்த்து தனியாக உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இதில் சாலையின் ஒருபுறத்தில் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், மறுபுறத்தில் உள்ள கடைகள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் திறக்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல புனேயிலும் அனைத்து வகையான தனிக்கடைகளையும் இன்று முதல் 10 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இதில் மதுக்கடைகளும் அடங்கும்.

பொது மக்கள் பிற்பகல் 3 மணிக்கு மேல் அத்தியாவசியம் இல்லாத தேவைகளுக்காக வெளியே சுற்றக்கூடாது எனவும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

நாசிக்கில் வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகளை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கபட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இதபோல நாக்பூரிலும் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

கடைகளில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
Tags:    

Similar News