செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் புதிதாக 1,010 டாக்டர்களை நியமிக்க அரசு முடிவு: மந்திரி சுரேஷ் குமார்

Published On 2021-05-31 03:00 GMT   |   Update On 2021-05-31 03:00 GMT
சாம்ராஜ்நகர் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 100 படுக்கை வசதிகள் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
கொள்ளேகால் :

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக மாநிலத்தில் புதிதாக 1,010 டாக்டர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு 16 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

கொரோனா 3-வது அலை பரவும் என்றும், அது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. சாம்ராஜ்நகர் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 100 படுக்கை வசதிகள் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 503 கிராமங்களில் 174 கிராமங்களுக்கு முன்கள பணியாளர்கள் நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

மீதமுள்ள கிராமங்களிலும் முன்கள பணியாளர்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெறும். கிராமப்புறங்களில் தற்போது நோய் பரவல் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News