செய்திகள்
கோப்புப்படம்

ஜூன் மாதத்தில் ‘10 கோடி தடுப்பூசி தயாரித்து வழங்குவோம்’ - மத்திய அரசுக்கு உற்பத்தி நிறுவனம் கடிதம்

Published On 2021-05-31 00:54 GMT   |   Update On 2021-05-31 00:54 GMT
ஜூன் மாதத்தில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்குவதற்கு எங்களால் முடியும் என்று மத்திய அரசுக்கு இந்திய சீரம் நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது.
புதுடெல்லி:

கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் புனே இந்திய சீரம் நிறுவனம் சார்பில், அதன் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குனர் பிரகாஷ்குமார் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் எங்கள் ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

மே மாதத்தில் எங்கள் உற்பத்தித்திறன் 6.5 கோடிகளாக இருந்தது.



இருப்பினும் ஜூன் மாதத்தில் எங்களால் 9 முதல் 10 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கொரோனா தடுப்பூசியில் இந்தியா சுய சார்பு அடைவதற்காகவும், மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்காகவும் உங்களது மதிப்புமிக்க வழிகாட்டுதல்களுக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி.

கொரோனாவில் இருந்து நாட்டு மக்களையும், உலகையும் காப்பதற்கு இந்திய சீரம் நிறுவனம் எப்போதுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் எங்கள் தலைமைச்செயல் அதிகாரி ஆதர்பூனவாலா தலைமையில் எங்கள் குழு இடைவிடாமல் தோளோடு தோள் நின்று செயல்படுகிறது.

மத்திய அரசின் ஆதரவாலும், உங்கள் வழிகாட்டுதலாலும் வரும் மாதங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு எங்கள் எல்லா வளங்களையும் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்ற உறுதியை அளிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News