செய்திகள்
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

கடைகளை பிற்பகல் 3 மணி வரை திறக்கலாம்- அரியானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-05-30 08:24 GMT   |   Update On 2021-05-30 08:24 GMT
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் செய்யப்படும் என அரியானா முதல்வர் அறிவித்துள்ளார்.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது. எனவே, கொரோனா நிலவரம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினசரி கொரோனா பாதிப்பு 1800க்கும் அதிகமாக பதிவாகிறது. எனவே, ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார். கடைகள் திறக்கப்படும்  நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட  சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கட்டார் கூறியதாவது:-

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படலாம். அதேசமயம் ஒற்றைப்படை - இரட்டைப்படை வழிமுறையை கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும். அதாவது ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் இரட்டைப்படை தேதிகளிலும் திறக்கலாம். 



கல்வி நிறுவனங்கள் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை மூடியே இருக்கும். இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். மால்கள், தியேட்டர்கள், மியூசியங்கள், ஜிம்கள், லைப்ரரி, ஸ்பா, சலூன்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை வர்த்தக சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். மார்க்கெட்டிற்கு நுழையும் இடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் செய்யப்படும். அந்த குழந்தைகளின் பராமரிப்புக்காக 18 வயது வரை மாதந்தோறும் தலா 2500 ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை, அந்த குழந்தைகளை பராமரிக்கும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். 

இதுதவிர அத்தகைய குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தப்படும். ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் பராமரிப்பு இல்லங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

அரியானாவில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 7.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7.22 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8132 பேர் உயிரிழந்துள்ளனர். 23094 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடையும் விகிதம் 95.86 சதவீதமாக உள்ளது.
Tags:    

Similar News