செய்திகள்
மம்தா பானர்ஜி

என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள் -மம்தா பானர்ஜி

Published On 2021-05-29 11:51 GMT   |   Update On 2021-05-29 11:51 GMT
தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருவதாக மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மம்தாவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மம்தாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்காள தலைமைச் செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

இதில், எங்கள் தவறு என்ன இருக்கிறது? பிரதமருடனான கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது. 

மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக பிரதமர் தன் காலில் விழும்படி கூறினால், நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்களா? நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்? 

வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டம் பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது பாஜக தலைவர்களும் கவர்னரும் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏன் அழைக்கப்பட்டனர்?

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News