செய்திகள்
மோடி, மம்தா பானர்ஜி

புயல் பாதிப்பு... பிரதமர் மோடியை சந்தித்து அறிக்கை அளித்த மம்தா பானர்ஜி

Published On 2021-05-28 12:18 GMT   |   Update On 2021-05-28 12:18 GMT
புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கொல்கத்தா:

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. யாஸ் புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். இரு மாநிலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். 



மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தார். புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால அறிக்கையும் அளித்து, நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதன்பின்னர் புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக்கூட்டத்தில் மம்தா பங்கேற்கவில்லை. அதிகாரிகள் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இக்கூட்டத்தை மம்தா தவிர்த்தது குறித்து ஆளுநர் அதிருப்தி தெரிவித்தார்.

இதுபற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், “பிரதமர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், அது எங்களுக்கு தெரியாது. அப்போது டிகாவில் மற்றொரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன். ஆனால், கலைகுண்டாவில் பிரதமரை சந்தித்து அறிக்கை அளித்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கேட்டுள்ளேன்” என்றார்.

புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒடிசாவுக்கு ரூ.500 கோடி,  மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் கூறி உள்ளார். 
Tags:    

Similar News