செய்திகள்
யாஸ் புயலால் மேற்குவங்காளத்தில் 1 கோடி பேர் பாதிப்பு

யாஸ் புயலால் மேற்குவங்காளத்தில் 1 கோடி பேர் பாதிப்பு - மம்தா பானர்ஜி தகவல்

Published On 2021-05-26 14:45 GMT   |   Update On 2021-05-26 14:45 GMT
யாஸ் புயலால் மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா:

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே  இன்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது.

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. 

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றின் காரணமாக சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். 

இந்த புயல் நாளை காலை ஜார்க்கண்டை அடையும். புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது என்று  வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
 
இந்நிலையில், யாஸ் புயலால் மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, யாஸ் புயலால் மேற்குவங்காளத்தில் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து 15 லட்சத்து 4 ஆயிரத்து 506 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.



மேலும், புயலின் போது கடலில் மீன் பிடிக்க சென்ற ஒரு நபர் எதிர்பாராத விதமாக கடலில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். யாஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்குவங்காளம் உள்ளதாக அவர் கூறினார்.
Tags:    

Similar News