செய்திகள்
ப சிதம்பரம்

தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக வெளியிட ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published On 2021-05-24 01:42 GMT   |   Update On 2021-05-24 01:42 GMT
மாநிலங்களிடம் 1 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி வைத்துள்ளன.
புதுடெல்லி :

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களிடம் 1 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு தடுப்பூசி பற்றாக்குறையை காரணமாக கூறுகின்றன. அதனால்தான் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

டெல்லியில் இந்த வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டவுடன் தெலுங்கானாவில் இருந்து ஒரு கெட்ட செய்தி கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. ஏனென்றால் தடுப்பூசியே இல்லை.

‘‘தடுப்பூசி பற்றாக்குறை இல்லை’’ என்று அடிக்கடி கூறும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் இதற்கு பதில் அளிப்பாரா? அவர் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை மாநிலவாரியாக மத்திய அரசு வெளியிடுவதால், திடுக்கிடும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஆகவே, இந்த எண்ணிக்கையை மாவட்டவாரியாக தினந்தோறும் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘கோவிஷீல்டு தடுப்பூசியை அறிவிக்கும்போது உலக சுகாதார நிறுவன வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை’’ என்று சீரம் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

அந்த பதிவில், ‘‘ஒருபக்கம் பெருந்தொற்று இருக்கும்போது, அதற்கும் மேலாக தலைவர் அகந்தை பிடித்தவராக இருக்கிறார்’’ என்று பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
Tags:    

Similar News