செய்திகள்
சக்திகாந்த தாஸ்

மத்திய அரசுக்கு ரூ.99 ஆயிரம் கோடி உபரி தொகையை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

Published On 2021-05-22 02:12 GMT   |   Update On 2021-05-22 02:12 GMT
கொரோனா 2-வது அலையால் எழுந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்கள், தற்போதைய பொருளாதார நிலவரம், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
மும்பை :

வங்கிக்கடனுக்கான வட்டி உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கி ஈட்டும் வருவாயில் அனைத்து விதமான செலவினம் போக மீதி இருப்பை ரிசர்வ் வங்கி உபரி தொகையாக வைத்திருக்கிறது.

இந்த உபரித்தொகை ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அப்போது ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போதும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்த ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் மத்தியக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்தவகையில் மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத கணக்கியல் காலத்திற்கு, மத்திய அரசுக்கு உபரித்தொகை ரூ.99,122 கோடியை வழங்க இந்த குழு ஒப்புதல் அளித்தது.

மேலும் கொரோனா 2-வது அலையால் எழுந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்கள், தற்போதைய பொருளாதார நிலவரம், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் கணக்கியல் ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் என்றவாறு மாற்றியிருக்கும் நிலையில், நிலைமாற்ற காலமான ஜூலை-2020 முதல் மார்ச்-2021 வரையிலான 9 மாத கால ரிசர்வ் வங்கியின் பணிகளையும் இந்தகுழு ஆய்வு செய்தது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் தேபப்ரதா பத்ரா, ராஜேஸ்வர் ராவ், ரபி சங்கர் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News