செய்திகள்
பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் மே 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-05-21 13:56 GMT   |   Update On 2021-05-21 13:56 GMT
கேரளாவில் வரும் மே 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கேரள மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 23-ந் தேதியோடு முடிவடைகிறது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் கேரளாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 3 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால், அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த 3 அடுக்கு ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாகவும், மலப்புரம் மாவட்டத்தில் 3 அடுக்கு ஊரடங்கு தொடரும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 29,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 142 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேரளாவில் இன்று ஒரே நாளில் 41,032 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 3,06,346 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News