செய்திகள்
கடுமையாக பாதிக்கப்பட்ட மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பகுதியை மேயர் கிஷோரி பெட்னேகர் பார்வையிட்ட காட்சி.

‘டவ்தே’ புயலால் ‘கேட்வே ஆப் இந்தியா’ சேதம்: 4 லாரி குப்பையை வெளியே தள்ளியது

Published On 2021-05-19 01:21 GMT   |   Update On 2021-05-19 01:21 GMT
டவ்தே புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கேட்வே ஆப் இந்தியாவின் தடுப்பு சுவர், அருகே உள்ள நடைபாதை சேதமடைந்து உள்ளது. 4 லாரி குப்பையை வெளியே தள்ளியது.
மும்பை :

அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்து உள்ள டவ்தே புயல் மும்பையை புரட்டிப்போட்டு சென்றுள்ளது. புயல் காரணமாக நேற்று முன்தினம் நகாில் 114 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 மரங்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்தது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன.

பலத்த மழை காரணமாக நகரில் சில பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டது. இதேபோல டவ்தே புயல் காரணமாக மும்பையில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. கடலில் எழும்பிய ராட்சத அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை தாக்கின. இதில் மும்பையில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ‘கேட்வே ஆப் இந்தியா’ பகுதியை ராட்சத அலைகள் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவின.

இந்தநிலையில் ராட்சத அலை தாக்கியதால் கேட்வே ஆப் இந்தியாவின் தடுப்பு சுவர், அதன் அருகில் உள்ள நடைபாதை சேதமடைந்து உள்ளது.

இதேபோல கேட்வே ஆப் இந்தியா பகுதி கடல் கக்கி சென்ற குப்பைகளால் நிறைந்தது.

இந்தநிலையில் ராட்சத அலையால் தாக்கப்பட்ட கேட்வே ஆப் இந்தியா பகுதியை மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கேட்வே ஆப் இந்தியாவின் பிரதான கட்டிடத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் கடலின் தடுப்பு சுவர், கேட்வே ஆப் இந்தியா அருகில் உள்ள இரும்பு கதவுகள் சேதமடைந்து உள்ளன. அலைகள் தாக்கியதில் சில துறைமுக கற்களும் பெயர்ந்து உள்ளன. அவை 5 மீட்டர் தூரத்திற்கு வீசப்பட்டுள்ளன. இதேபோல கடல் டன் கணக்கில் குப்பைகளையும் மெரின் டிரைவ் பகுதியில் வெளியேற்றி சென்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து 4 லாரி அளவுக்கு குப்பைகள் அள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
Tags:    

Similar News