செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ரத்து - புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது

Published On 2021-05-18 00:34 GMT   |   Update On 2021-05-18 00:34 GMT
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது. குறிப்பாக தொடக்க கட்ட தொற்றில் இருந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்காக கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா தானம் பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது.

ஆனால் இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.



இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கூடிய ஐ.சி.எம்.ஆர்-ன் சிறப்பு குழுவினர் இது குறித்து விவாதித்தனர். பின்னர் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை போதிய பலன் அளிக்காததால், கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து இதை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஐ.சி.எம்.ஆர்-ன் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு பிளாஸ்மா சிகிச்சையை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டு உள்ளது.
Tags:    

Similar News