செய்திகள்
புயல் மையம் கொண்டுள்ள பகுதி

குஜராத்தை இன்று தாக்குகிறது டவ்-தே புயல்... மும்பை ஏர்போர்ட் மூடப்பட்டது

Published On 2021-05-17 08:45 GMT   |   Update On 2021-05-17 08:45 GMT
குஜராத்தின் போர்பந்தர்- மகுவா இடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்:

வங்கக் கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

கடலோர பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. புயல் மழை தொடர்பான விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 



மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. மும்பையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயலின் காரணமாக மும்பை விமான நிலையம் 11 மணிக்கு மூடப்பட்டது. பந்த்ரா-ஒர்லி கடல்வழிப் பாதையும் மூடப்பட்டது. 

ராய்காட்டில் புயல் தொடர்பான விபத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், 2 பேர் காயமடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 8000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டவ்-தே புயலானது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் குஜராத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்பந்தருக்கும் மகுவாவுக்கும் இடையே கரை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போர்பந்தர்-மகுவா இடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.



போர்பந்தர், அம்ரேலி, ஜுனாகர், கிர் சோம்நாத், போதத் மற்றும் அகமதாபாத்தின் கடலோரப் பகுதிகளில் புயலால் அதிக அளவில் சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மின்கம்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்களும் சேதம் அடையும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரெயில் பாதைகள் மற்றும் சிக்னல் அமைப்புகளும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய பயிர்களுக்கும் சேதம் ஏற்படும்.
Tags:    

Similar News