செய்திகள்
சதீஸ் ஜார்கிகோளி

நாட்டில் கொரோனா 2-வது அலை பரவலுக்கு பாஜகவே காரணம்: சதீஸ் ஜார்கிகோளி

Published On 2021-05-17 02:16 GMT   |   Update On 2021-05-17 02:16 GMT
நாட்டில் கொரோனா 2-வது அலை பரவலுக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி குற்றம்சாட்டினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் பெலகாவி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். அதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். இந்த தோல்வி வெற்றிக்கு சமமானது. இந்த இடைத்தேர்தலில் எனக்கு எனது சகோதரர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் தங்களின் கட்சிக்கு ஆதரவாக பணியாற்றினர்.

காங்கிரஸ், கொலைகார கட்சி என்று நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். கொரோனாவை நாங்கள் பரப்பவில்லை. இடைத்தேர்தலை மிக எளிமையாக நடத்துமாறு காங்கிரஸ் கூறியது. ஆனால் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை நீண்ட காலமாக நடத்தினார்கள். இதை மத்திய பா.ஜனதா அரசு ஆதரித்தது. அதனால் நாட்டில் கொரோனா 2-வது அலை பரவலுக்கு காரணம் பா.ஜனதா, நாங்கள் அல்ல. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் வேண்டுமென்றே அவ்வாறு தேர்தலை நடத்தினர்.

இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இதற்கு கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும். இறந்த ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.
Tags:    

Similar News