செய்திகள்
கோப்புப்படம்

இறந்தவர்கள் கண்ணியம் காக்க சிறப்பு சட்டம் இயற்றுங்கள் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி

Published On 2021-05-15 23:22 GMT   |   Update On 2021-05-15 23:22 GMT
கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் கங்கையில் மிதந்து வந்த அவலத்தை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் கங்கையில் மிதந்து வந்த அவலத்தை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இறந்தோர் கண்ணியம் காக்க சிறப்பு சட்டங்களை இயற்றுங்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் வட மாநிலங்களில் கொத்து கொத்தாக இறக்கின்றனர். இவர்களின் உடல்களை தகனம் செய்வதில் மின்மயானங்களில் பல மணி நேர காத்திருப்பு, விறகுகட்டைகள் தட்டுப்பாடு, அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தநிலையில் பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களை ஜல சமாதி அடைய செய்கிற வகையில், கங்கை நதியில் வீசி உள்ளனர். அந்த உடல்கள் மிதந்து வந்தன. இதுகுறித்த தகவல்கள், காட்சிகள் வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கையில் இறங்கியது.

அது, கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-



* இறந்தோர் கண்ணியத்தை, உரிமைகளை காக்கிற வகையில் சிறப்பு சட்டங்களை இயற்ற வேண்டும்.

* இறந்தோரின் உரிமை, கண்ணியத்தை குலைக்கிற வகையில் மொத்தமாக அடக்கமோ, தகனமோ செய்ய அனுமதிக்கக்கூடாது.

* பில் தொகை நிலுவை என்பதால் இறந்தோரின் உடல்களை ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தர மறுக்கக்கூடாது. கேட்க ஆளற்ற உடல்களையும் பத்திரமான சூழலில் பாதுகாக்க வேண்டும்.

* ஒருவர் இறந்தால் அது குறித்த தகவலை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு, அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு, அரசு நிர்வாகத்துக்கு, சட்ட அதிகாரிகளுக்கு இவற்றில் எது சாத்தியமோ அதன்படி தெரிவிப்பது குடிமக்களின் கடமை.

* இறப்பவர்கள் பற்றிய தரவுகளை டிஜிட்டல் முறையில் பராமரிக்க வேண்டும். வங்கிக்கணக்கு, ஆதார் அட்டை, காப்பீடு போன்றவற்றில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பிரேத பரிசோதனைகளை தாமதிக்காமல் போலீஸ் நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கேட்க ஆளற்றவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் இறுதிச்சடங்குகளை செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். தற்காலிக தகன மையங்களை அமைக்க வேண்டும்.

* உடல்களை இறந்தவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்க முடியாத சூழலில், மாநில நிர்வாகமோ உள்ளூர் நிர்வாகமோ இறுதிச்சடங்குகளை மதஅல்லது மரபுமுறைப்படி செய்யவேண்டும்.

* இறந்தோர் உடல்களை குவித்து வைக்க அனுமதிக்கக்கூடாது. மின்தகன மையங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இறுதிச்சடங்குகளை செய்கிற ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும்.

இந்த பரிந்துரைகள் அடங்கிய உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News