செய்திகள்
சோதனை சாவடி

தெலுங்கானாவுக்குள் நுழைய ஆம்புலன்சுகளுக்கு தடை: கொரோனா நோயாளிகள் கண்ணீர் புலம்பல்

Published On 2021-05-14 13:02 GMT   |   Update On 2021-05-14 13:02 GMT
கரிகபாடு சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த பல ஆம்புலன்சுகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றன.
ஐதராபாத்:

ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு செல்லும் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் தெலுங்கானாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு சிகிச்சைக்காக தெலுங்கானாவுக்கு வர கூடிய அனைத்து ஆம்புலன்சுகள் மற்றும் தனியார் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அப்படி வருபவர்களிடம், மருத்துவமனையிடம் இருந்து பெற்ற அனுமதி மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு மைய சுகாதார இயக்குனரின் அங்கீகரிக்கப்பட்ட பாஸ் ஆகியவற்றை உடன்  வைத்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

பொதுமக்கள் இந்த இரண்டுக்கும் உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.  அதன்பின்னரே அவர்கள் தெலுங்கானாவுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதன் எதிரொலியாக கரிகபாடு சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த பல ஆம்புலன்சுகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றன.



இதுபற்றி கட்வால் பகுதியில் சிக்கி தவித்த பெண் ஒருவர் கூறும்பொழுது, ஆந்திர பிரதேசம்-தெலுங்கான எல்லையில் அதிகாலை 4 மணிமுதல் காத்திருக்கிறேன்.

ஆக்சிஜன் தீர்ந்தபொழுது, நிருபர்கள் எனக்கு உதவி செய்தனர்.  இதனால், கர்னூல் பகுதிக்கு சென்று ஆக்சிஜனை நிரப்பி கொண்டு ஆம்புலன்சில் திரும்பி வந்துள்ளேன்.  இந்த ஆக்சிஜனும் 2 மணிநேரத்தில் தீர்ந்து விடும் என வேதனையுடன் கூறினார்.

ஆந்திர பிரதேசம் அல்லது தெலுங்கானா என இரு அரசாங்கங்களிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News