செய்திகள்
இறந்து கிடந்த யானையை பார்வையிடும் அதிகாரிகள்

அசாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

Published On 2021-05-14 05:45 GMT   |   Update On 2021-05-14 05:45 GMT
நாகான் மாவட்டம் கத்தியாடோலி சரகத்திற்கு உட்பட்ட கண்டோலி வனப்பகுதியில் யானைகள் இறந்தது தொடர்பாக உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர்.
திஸ்பூர்:

அசாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகான் மாவட்டத்திற்கு உட்பட்ட பாமுனி மலை உச்சியில் 18 காட்டு யானைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. நாகான் மாவட்டம் கத்தியாடோலி சரகத்திற்கு உட்பட்ட கண்டோலி வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

யானைகள் இறந்தது தொடர்பாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். யானைகளின் மாதிரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மழை பெய்தபோது கடுமையான இடி மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் யானைகள் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

எனினும், யானைகள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் வனப்பகுதியில் ஆய்வு செய்கின்றனர்.

யானைகள் உயிரிழப்பு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பரிமள் சுக்லபாயித்யா வேதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார். நேரடியாக சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரிக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News