செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைப்பு: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

Published On 2021-05-14 03:18 GMT   |   Update On 2021-05-14 03:18 GMT
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்த பிறகே ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கர்நாடகத்தில் தான் அதிகம் உள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.

மராட்டியம் 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் வருகிற 24-ந் தேதி தொடங்க இருந்த பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர், மாணவர்களின் கவலைகளை புரிந்து கொண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்ததும், தேர்வுக்கான கால அட்டவணை அறிவிக்கப்படும். புதிய கால அட்டவணை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் இதுபற்றி கவலைப்படாமல், தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்" என்றார். கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்த பிறகே ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் ஜூலை மாதத்திற்கு பிறகே தேர்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News