செய்திகள்
குமாரசாமி

ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் கர்நாடகத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது: குமாரசாமி

Published On 2021-05-14 02:37 GMT   |   Update On 2021-05-14 02:37 GMT
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக பார்க்க வேண்டும். யாருக்கு பொருட்கள் அவசரமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு 120 டன் ஆக்சிஜன் மட்டுமே வினியோகம் செய்துள்ளது. கர்நாடகத்தை விட குறைவான பாதிப்பு உள்ள உத்தர பிரதேசத்திற்கு 1,680 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தில் நமது நாட்டில் கர்நாடக மக்களை புறக்கணிப்பது சரியா?. கர்நாடகத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என்பது அரசே வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.

கன்னடர்கள் விஷயத்தில் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொள்வது ஏன். இங்கு பா.ஜனதா அரசு இருப்பதற்காகவா? அல்லது பா.ஜனதாவுக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பதற்காகவா? அல்லது எடியூரப்பாவை வில்லனாக ஆக்குவதற்காகவா?.

இது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் நாடு. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக பார்க்க வேண்டும். யாருக்கு பொருட்கள் அவசரமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள். கொரோனா தடுப்பூசி விஷயத்தில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தலைமை செயலாளரே கூறியுள்ளார்.

தற்போது அரசிடம் 7 லட்சம் டோஸ் தடுப்பூசி மட்டுமே உள்ளதாகவும், 2-வது டோஸ் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும் தலைமை செயலாளர் கூறியுள்ளார்.

கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை பா.ஜனதாவினர், பா.ஜனதாவை ஆதரிப்பவர்கள் பொறுத்துக் கொள்கிறார்களா?. ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழக்கும் கன்னடர்களின் இழப்புக்கு அத்தகையவர்கள் பொறுப்பு ஏற்பார்களா?. கர்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் தர வேண்டிய இடத்தில் 120 டன் ஆக்சிஜன் வழங்கியதற்காக மத்திய அரசையும், பிரதமரையும் இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கர்நாடகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மறந்துவிட்டனர்.

மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளும் போக்கை கைவிட்டு கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய ஆக்சிஜனை ஒதுக்க வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியம். நாம் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?. நிதி ஒதுக்கீடு விஷயத்தில் நடந்த அநீதியை சகித்துக் கொண்டோம். ஆனால் உயிர் பாதுகாப்பு விஷயத்தில் பாகுபாட்டை சகித்துக்கொள்வது வேண்டாம்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News