செய்திகள்
முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கர்நாடக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை

Published On 2021-05-14 02:18 GMT   |   Update On 2021-05-14 02:18 GMT
கர்நாடக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நிபுணர் குழு ஒன்றை அமைத்து இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் பிறகு கடந்த 10-ந் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிற 24-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

கர்நாடகத்தில் அதிகபட்சமாக கடந்த 5-ந் தேதி 50 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வைரஸ் பரவல் என்பது குறைந்துள்ளது.

தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 5-ந் தேதி அதிகபட்சமாக 23 ஆயிரத்து 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு படிப்பயாக பரவல் குறைந்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, பீதர், கலபுரகியில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போது 24 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளும், 1,145 ஐ.சி.யு. படுக்கைகளும், 2 ஆயிரத்து 59 வென்டிலேட்டர் படுக்கைகளும், ஆயிரத்து 248 எச்.எப்.என்.சி. படுக்கை வசதிகளும் உள்ளன. அதே போல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்தகைய படுக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 200 வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளோம். தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க அரசு 70 சதவீத நிதியை வழங்குகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திரவ ஆக்சிஜனை மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து அதிகமாக பெற நடவடிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மூலம் அவற்றை அதிகப்படுத்துவது, ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிகளவில் கொள்முதல் செய்வது, ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு கர்நாடகத்திற்கு 1,015 டன் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 765 டன் ஆக்சிஜன் கர்நாடகத்தில் இருந்தே கிடைக்கிறது. மீதமுள்ள ஆக்சிஜனை வெளிமாநிலங்களில் இருந்து அனுப்புகிறது.

பக்ரைன் நாட்டில் இருந்து 40 டன், குவைத்தில் இருந்து 100 டன் ஆக்சிஜன் பெற்றுள்ளோம். ஜாம்ஷெட்பூரில் இருந்து 120 டன் ஆக்சிஜன் வந்துள்ளது.

கர்நாடகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாவட்ட, தாலுகா ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தம் 127 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதில் 28 ஆலைகளை மத்திய அரசு அமைக்கிறது. மாநில அரசு 62 ஆலைகளை நிறுவுகிறது. கடந்த 20 நாட்களில் 730 ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்துள்ளோம். இந்த சிலிண்டர்களை மாவட்டங்களுக்கு வழங்கியுள்ளோம். 3 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்டங்களுக்கு கொடுத்துள்ளோம்.

சுகாதாரத்துறை பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது.

கர்நாடகத்திற்கு இதுவரை 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 10 லட்சத்து 90 ஆயிரம் டோஸ் ‘கோவேக்சின்’. மீதமுள்ளவை ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆகும். கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க 3 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி கொள்முதலுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம்.

இதில் 2 கோடி டோஸ் கோவிஷீல்டு, 1 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி. இவற்றில் 8 லட்சத்து 94 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி உலகளாவிய டெண்டர் மூலம் வெளிநாடுகளில் இருந்து 2 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இன்றைய நிலவரப்படி 19 லட்சத்து 97 ஆயிரம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி பெற தகுதி பெற்றுள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து முழு பாதுகாப்பு பெற 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக முக்கியம். அதனால் தற்போது மாநில அரசிடம் உள்ள தடுப்பூசி இருப்பை பயன்படுத்தி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

தமிழ்நாடு மாநிலம் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் தொற்று நோயியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் ககன்தீப் காங்க் என்பவரை கர்நாடக அரசின் தடுப்பூசி செயல்திட்ட ஆலோசகராக நியமனம் செய்துள்ளோம்.

மத்திய அரசு கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை 3 லட்சத்து 100 டோஸ் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வழங்கியது. இதில் 2 லட்சத்து 72 ஆயிரம் டோஸ் மருந்தை வினியோகம் செய்துள்ளோம். கடந்த 10-ந் தேதி முதல் இதுவரை 2.74 லட்சம் டோஸ் ‘ரெம்டெசிவிர்’ மருந்து கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பிரபல டாக்டர் தேவிபிரசாத்ஷெட்டி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுளளது.

மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே, எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பேட்டியின்போது, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News