செய்திகள்
சிவசேனா

5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2021-05-14 01:49 GMT   |   Update On 2021-05-14 01:49 GMT
இதற்கு முன்பு பீகார் சட்டசபை தேர்தலின் போதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்பிறகு 18 நாட்களில் 15 முறை விலை உயர்த்தப்பட்டது.
மும்பை :

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தானை தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திடீரென விலை குறையவும் செய்தது. ஆனால் தேர்தல் முடிவு வெளியான பிறகு காட்சி தலைகீழாக மாறிவிட்டது.

இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் தேர்தலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர்.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாக 5 முறை விலையை உயர்த்தியதால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை சாதனை அளவை எட்டியுள்ளன. தேர்தல் முடிவுகள் கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டன. மே 4-ந் தேதி முதல் எரிபொருள் விலை உயர்வு கண்டு வருகிறது.

சிறிது நாட்களுக்கு தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதால் தேர்தல் காலத்தில் விலையை குறைக்க ஏதுவாக, தற்போதே அரசு கருவூலத்தில் பணத்தை நிரப்ப மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் சாமானிய மக்களின் பையில் என்ன இருக்கிறது? அவை எப்போதும் போல் காலியாக கிடக்கின்றன.

வேலையின்மை மற்றும் சம்பள குறைப்பு ஆகியவை காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பீகார் சட்டசபை தேர்தலின் போதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்பிறகு 18 நாட்களில் 15 முறை விலை உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு டெல்லி சட்டசபை தேர்தலின்போது அதிசயத்தக்க விதத்தில் பெட்ரோல் விலை நிலையாக இருந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும் இந்தியாவில் விலை நிலையாக இருந்தது.

இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.
Tags:    

Similar News