செய்திகள்
நிரவ் மோடி

வைர வியாபாரி நிரவ் மோடி மும்பை கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Published On 2021-05-14 01:36 GMT   |   Update On 2021-05-14 01:36 GMT
ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து நோட்டீசும் அனுப்பினார்.
மும்பை :

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனம் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், அந்த வங்கியின் அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் உத்தரவாத கடிதம் பெற்று பல்வேறு வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்தது.

இது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நிரவ் மோடி வெளிநாடு தப்பிவிட்டார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் அவர் பிடிபட்டதை அடுத்து, அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை நாடு கடத்தி கொண்டு வர இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இதற்கு மத்தியில் பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மும்பை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத்துறை வேண்டுகோளை ஏற்று நிரவ் மோடியை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாடு தப்பி ஓடிய பொருளாதார தலைமறைவு குற்றவாளி என்று அந்த கோர்ட்டு அறிவித்தது.

இந்தநிலையில் அவர் நாடு திரும்ப மறுத்து வருவதால், அவரது சொத்துகளை பொருளாதார தலைமறைவு குற்றவாளி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டின் நீதிபதி வி.சி.பார்டே முன்னிலையில் நடந்தது. அப்போது, ஜூன் 11-ந் தேதியன்று தனது முன்னிலையில் கோர்ட்டில் ஆஜராக நிரவ் மோடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நிரவ் மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றையும் நீதிபதி அனுப்ப உத்தரவிட்டார். அதில், ஜூன் 11-ந் தேதி நேரில் ஆஜராகாவிட்டால், அமலாக்கத்துறை குறிப்பிட்டு உள்ள உங்களது சொத்துகளை பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்று கேட்டு உள்ளார்.

இதே நோட்டீசை நிரவ் மோடியின் மனைவி அமி, சகோதரி புர்வி, மைத்துனர் மயங்க் மேத்தா ஆகியோருக்கும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News