செய்திகள்
அசாதுதீன் ஓவைசி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமரே காரணம் - அசாதுதீன் ஓவைசி

Published On 2021-05-13 19:54 GMT   |   Update On 2021-05-13 19:54 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே காரணம் என ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்



இதுதொடர்பாக நேற்று ஓவைசி கூறுகையில், நிபுணர்கள் கூறுவது போல ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகைக்கும் நாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியாது. அதை செய்வதற்கு மோடி அரசு (மத்திய பாஜக அரசு) மாதம் தோறும் 30 கோடி தடுப்பூசிகளை கொடுத்து அதை மக்களுக்கு செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதில் அவர்கள் தோல்வியடைந்து விட்டனர்.

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம். கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான உத்தரவை அவர் தாமதமாக கொடுத்தார். நம்மிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.

தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின்னர் 4 வாரத்திற்குள் இரண்டாவது டோஸ் போட வேண்டும் என்று அவர்கள் (மத்திய அரசு) மக்களிடம் பொய் சொல்லியுள்ளனர். இரண்டாவது டோஸ் இடைவெளி 4 வாரங்களில் இருந்து 6 வாரங்களாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அது 12 முதல் 16 வாரங்களாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இது அவர்களது கொள்கை முடக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News