செய்திகள்
ஜேபி நட்டா

கொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது: சோனியாவுக்கு கடிதம் மூலம் ஜே.பி. நட்டா தாக்கு

Published On 2021-05-11 12:25 GMT   |   Update On 2021-05-11 12:25 GMT
கொரோனா வைரஸ் தொற்றில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக சோனியா காந்திக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பா.ஜனதா தேசியத் தலைவர் ஜேபி நட்டா கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஜேபி நட்டா கூறியிருப்பதாவது:-

உங்களது தலைமையில், உங்கள் கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்த வேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறி கேரளாவில் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டிவிட்ட பின்னர், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பேசுகிறீர்கள்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ துவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.

இரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும்.

பொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்த வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது.



இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால், காங்கிரஸ் கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாராளுமன்ற புதிய கட்டடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் நட்டா கூறி உள்ளார்.
Tags:    

Similar News