செய்திகள்
ரெயில்வே ஊழியர்கள்

இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-11 02:43 GMT   |   Update On 2021-05-11 02:43 GMT
இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், தினமும் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே கூறியுள்ளது.
புதுடெல்லி :

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி வைரசின் கொடூர தாக்குதலுக்கு எந்தவித பேதமும் இன்றி அனைத்து பிரிவினரும் சிக்கி வருகின்றனர். இதில் ரெயில்வே ஊழியர்களும் விதிவிலக்கல்ல. உலக அளவில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருவதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

இது குறித்து வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறியதாவது:-

கொரோனாவை பொறுத்தவரை நாட்டின் பிற மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் இருந்து ரெயில்வேயும் வேறுபட்டது அல்ல. நாங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறோம்.

போக்குவரத்து பணிகளை செய்து வரும் நாங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை நடத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளின்போது நாள்தோறும் சுமார் 1,000 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நேற்று (நேற்று முன்தினம்) வரை 1,952 ஊழியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ரெயில்வே கவலை கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சுறுத்தலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு சுனீத் சர்மா தெரிவித்தார்.
Tags:    

Similar News