செய்திகள்
சோனியா காந்தி

கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும்- காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

Published On 2021-05-10 10:21 GMT   |   Update On 2021-05-10 10:21 GMT
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.
புதுடெல்லி:

5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் மட்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த அந்த கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன. புதுவையில் ஆட்சியை பறிகொடுத்தது. கேரளா, அசாமில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது. மேற்கு வங்காளத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. கட்சியின் இடைக்கால  தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் பேசியதாவது:-



‘ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற்ற அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், நமது செயல்திறனைப் பற்றி மிகவும் வெளிப்படையாக, சுருக்கமாகக் கூற வேண்டும். எதிர்பார்த்ததை விட குறைவாக ஏன் செயல்பட்டோம்? என்பதை தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். நம் கட்சியில் சீர்திருத்தங்கள் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கூறுகின்றன.

கடுமையான பின்னடைவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று சொல்வது நம்மை குறைத்து மதிப்பிடுவது ஆகும். இதுபோன்ற தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திய ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, விரைவாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஒரு சிறிய குழுவை அமைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News