செய்திகள்
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் கொரோனா குறைகிறது: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிவு

Published On 2021-05-10 01:41 GMT   |   Update On 2021-05-10 01:41 GMT
மகாராஷ்டிராவில் ஒரு மாதத்துக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து 50 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிவதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
மும்பை :

நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. குறிப்பாக இந்த அலை மகாராஷ்டிரா மாநிலத்தை புரட்டிப்போட்டு உள்ளது.

கடந்த மாதம் மாநிலத்தில் தினந்தோறும் சராசரியாக 60 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலனாக கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 48 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து உள்ளது.

மாநிலத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 47 ஆயிரத்து 288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

இதுவரை மாநிலத்தில் 51 லட்சத்து 1 ஆயிரத்து 737 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 226 பேர் பாதிப்பில் இருந்து குணமானார்கள். கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமானவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்து குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6 லட்சத்து 15 ஆயிரத்து 783 ஆக சரிந்து இருப்பது மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் மேலும் 572 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 849 ஆகி உள்ளது. நேற்று மாநிலத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை 2 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரத்து 797 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 17.33 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 86.4 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். 1.49 விகிதம் பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் மும்பையிலும் தொடர்ந்து நோய் பாதிப்பு குறைந்து வருவது அரசுக்கு நம்பிக்கை அளித்து உள்ளது. நகரில் நேற்று சோதனை செய்யப்பட்ட 32 ஆயிரத்து 590 பேரில் 2 ஆயிரத்து 403 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மேலும் 68 பேர் பலியானதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 817 ஆக உயர்ந்து உள்ளது. நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 153 நாட்களாக அதிகரித்து இருக்கிறது.

தொற்று பாதித்தவர்களில் 91 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நகரில் தற்போது 89 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 553 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News