செய்திகள்
கோப்புபடம்

திருப்பதி ஜெயிலில் துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் உயிரிழப்பு

Published On 2021-05-09 09:35 GMT   |   Update On 2021-05-09 09:35 GMT
திருப்பதி ஜெயிலில் துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி நாராயணரெட்டி (வயது 50). இவர் சித்தூரில் உள்ள கிளைச்சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கிளை சிறைக்கு மாறுதலாகி வந்தார்.

திருப்பதி போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள சப் ஜெயிலில் பணிக்கு சென்றார். நேற்று இரவு 9 மணிக்கு பணி முடிந்தது. அவருடன் பணிபுரியும் சித்தா ரெட்டி என்பவர் வேலைக்கு வந்தார்.

இதையடுத்து சிறையில் உள்ள அறையில் லட்சுமி நாராயண ரெட்டி சீருடையை மாற்றுவதற்காக சென்றார். அப்போது அறையில் சுவற்றின் ஓரமாக வைத்திருந்த துப்பாக்கியின் விசையை அவர் தவறுதலாக மிதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்து வந்த குண்டு லட்சுமி நாராயண ரெட்டியின் தலையின் பின்புறம் தாக்கியது.

தலையில் குண்டு பாய்ந்ததால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி நாராயண ரெட்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்ட சித்தா ரெட்டி அறைக்கு சென்று பார்த்தார். அங்கு லட்சுமி நாராயணரெட்டி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அப்பால நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அப்பால நாயுடு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான போலீஸ்காரர் உடல் பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News