செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய அரசு செயல்படாததின் விளைவே கொரோனா நெருக்கடி - மம்தா பாய்ச்சல்

Published On 2021-05-08 20:44 GMT   |   Update On 2021-05-08 20:44 GMT
மேற்கு வங்காள மாநில சட்டசபை சபாநாயகராக 3-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீமன் பந்தோபாத்யாய் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொல்கத்தா:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று எழுச்சி பெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில சட்டசபை சபாநாயகராக 3-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீமன் பந்தோபாத்யாய் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

பா.ஜ.க.வுக்கு தேர்தல் கமிஷன் நேரடியாக உதவியிருக்காவிட்டால், அவர்கள் 30 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்று சவாலாக கூறுகிறேன். இந்த தேர்தலில் பல இடங்களில் தேர்தல் கமிஷன் கண்காணிப்பின்கீழ் மோசடிகள் அரங்கேறின.

தற்போது பா.ஜ.க., மக்கள் தீர்ப்பை ஏற்காமல், போலியான வீடியோக்களை வெளியிட்டு வன்முறையைத் தூண்டி விடுகிறது. மாநிலத்தில் வன்முறையையும், வகுப்புவாத பதற்றத்தையும் ஏற்படுத்தினால், அவர்களை மாநில நிர்வாகம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மாநிலத்தில் தேர்தல் பணிக்காக வந்த மத்திய படையினர், கொரோனா (ஆர்.டி.பி.சி.ஆர்.) பரிசோதனை செய்து கொள்ளவில்லை. இதனால்தான் தொற்று பரவியது.

இங்கே இரட்டை என்ஜின் அரசை ஏற்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டு, அவர்கள் இந்தியாவை அழிவின் விளிம்புக்குத் தள்ளி உள்ளனர். கடந்த 6 மாத காலமாக மத்திய அரசு எந்த வேலையையும் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் இந்த மாநிலத்தைப்பிடிக்க வேண்டும் என்று இங்கே தான் இருந்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடி ஆகும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, பிரதமர் இல்லத்துக்கு, சிலைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடுவதற்கு பதிலாக அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சியான பா.ஜ.க., சட்டசபை நிகழ்ச்சிகளை நேற்று புறக்கணித்தது.
Tags:    

Similar News