செய்திகள்
கோப்புப்படம்

3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி சப்ளை - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2021-05-08 18:49 GMT   |   Update On 2021-05-08 18:49 GMT
கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
புதுடெல்லி:

3 நாளில் மாநிலங்களுக்கு 53 லட்சம் தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று ஒரு பக்கம் தீவிரமாக பரவிக்கொண்டிருந்தாலும், உயிரிழப்புகள் நேர்ந்து கொண்டிருந்தாலும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்ந்து சூடு பிடித்து வருகிறது.

கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 17.49 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளதாக கூறுகிறது.



இதில் 16.7 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் அது தெரிவிக்கிறது. இன்னும் 84 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கைவசம் உள்ளன என்றும் கூறுகிறது.

இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

* மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இன்னும் 3 நாளில் 53 லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும். குஜராத்துக்கு அதிகபட்சம் 8.98 லட்சம் தடுப்பூசி வினியோகிக்கப்படும். இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கை ஆகும். ஏற்கனவே இந்த மாநிலத்துக்கு 1.39 கோடி தடுப்பூசி வழங்கி 1.35 கோடி டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* மராட்டியத்துக்கு 6.03 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

* தமிழகத்தில் 3.94 சதவீத தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. லட்சத்தீவில் அதிகபட்சமாக 22.7 சதவீத தடுப்பூசிகள் வீணாகி உள்ளன.

* டெல்லிக்கு 40.22 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, 36.09 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News