செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

இந்தியாவிற்கு 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கியது வங்காளதேசம்

Published On 2021-05-06 20:05 GMT   |   Update On 2021-05-06 20:05 GMT
வங்காளதேசத்தில் இருந்து கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு மிகவும் அவசியமான இந்த மருந்தை பல நாடுகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் துணை நிற்பதாகவும் 10,000 ரெம்டெசிவிர் மருந்துகள், 30,000 பி.பி.இ. உபகரணங்கள் மற்றும் விட்டமின் மாத்திரைகளை இந்தியாவுக்கு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

அதன்படி வங்காள தேசத்தில் தயாரிக்கப்பட்ட இந்த 10,000 ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அந்நாட்டு மக்கள் சார்பாக மருத்துவ உதவியாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வங்காளதேசத்தின் துணை உயர் ஸ்தானிகர் தவுஃபிக் ஹசன் இந்திய அதிகாரிகளிடம் வழங்கினார்.
Tags:    

Similar News