செய்திகள்
சக்திகாந்த தாஸ்

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published On 2021-05-06 01:41 GMT   |   Update On 2021-05-06 01:41 GMT
நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதியாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை :

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது:-

கடந்த நிதியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. நிதியாண்டின் இறுதியில் பொருளாதாரம் மீண்டெழும் நேரத்தில், இரண்டாவது அலை தாக்கி உள்ளது.

முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. அதனால் பொருளாதார சூழல் மோசமடைந்துள்ளது. நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நிலைமைக்கு ஏற்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை, ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி பணப்புழக்கத்தை அளிக்கும். இதைக்கொண்டு வங்கிகள் புதிய கடன்களை வழங்கும்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், வினியோகஸ்தர்கள், மருத்துவ உபகரண வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள், ஆய்வுக்கூடங்கள், கொரோனா மருந்து இறக்குமதியாளர்கள், கொரோனா நோயாளிகள் ஆகியோருக்கு இந்த புதிய கடன்களை வங்கிகள் வழங்கும்.

3 ஆண்டு காலத்துக்குள் திருப்பிச்செலுத்தும் வகையில் ரெபோ வட்டி விகிதத்தில் இந்த கடன்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை இக்கடன்கள் கிடைக்கும்.

மேலும், கடந்த ஆண்டு தங்கள் கடன்களை மறுசீரமைக்காத தனிநபர்கள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவை தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுவரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். வருகிற 20-ந்தேதி, ரூ.35 ஆயிரம் கோடிக்கு அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கும்.

இதுதவிர, சிறு நிதி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்கும். அதைக்கொண்டு நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிகள் கடனாக வழங்கும். அக்டோபர் 31-ந்தேதிவரை இந்த கடன்கள் கிடைக்கும். மாநில அரசுகளுக்கான ‘ஓவர் டிராப்ட்’ வசதிகளுக்கான வரம்புகள் தளர்த்தப்படும்.

கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாதது அல்ல. நிதிநிலைமை இணக்கமாகவும், சந்தை சிறப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம். மக்களின் சிரமத்தை தணிப்பதில் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News