செய்திகள்
உச்ச நீதிமன்றம்

தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது -உச்ச நீதிமன்றம்

Published On 2021-04-30 09:02 GMT   |   Update On 2021-04-30 09:02 GMT
கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஏன் விநியோகிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுடெல்லி:

கொரோனா தொற்று அதிகரிப்பு, ஆக்சிஜன் சப்ளை, மருந்து சப்ளை மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான பல்வேறு கொள்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஏன் விநியோகிக்கக்கூடாது? அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோக திட்டத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருக்க வேண்டும். தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்தால் தடுப்பூசியின் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்?



கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக எழுத்தறிவற்ற மக்கள் எப்படி பதிவு செய்வார்கள்? மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் உதவி கோருவதை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது. அப்படி செய்தால் அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதுவோம்.

ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது மத்திய- மாநில அரசுகள், மாநில டிஜிபிக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த உத்தரவை மீறி நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News