செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசிகளுக்கு மக்கள் அதிக விலை கொடுக்க வைத்திருக்கிறது மத்திய அரசு - ராகுல் காந்தி தாக்கு

Published On 2021-04-28 21:31 GMT   |   Update On 2021-04-28 21:31 GMT
கொரோனா தடுப்பூசிகளுக்கு மக்கள் அதிக விலை கொடுக்க வைத்திருக்கிறது மத்திய அரசு, அரசமைப்பு மக்களை கைவிட்டுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனோ தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு தடுப்பூசி நிறுவனங்களுக்கு மக்களின் பணம்தான் கொடுக்கப்பட்டது. அதே மக்கள் தற்போது தடுப்பூசிகளுக்கு உலகத்திலேயே அதிக விலையைக் கொடுக்க மத்திய அரசு வைத்திருக்கிறது. மோடி நண்பர்களின் லாபத்துக்காக, மீண்டும் ஒருமுறை மக்களை அரசமைப்பு கைவிட்டுவிட்டது’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் 12.12 கோடி மக்களுக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியும், 2.36 கோடி மக்களுக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசியும் போடப்பட்டிருக்கின்றன. இது வெறும் 8 சதவீதம்தான்’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்தே, ‘மக்களால் அடுத்த தடுப்பூசி கட்டத்துக்கு ‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை’ என்று புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ள அசாம் மாநில பா.ஜ.க. மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘உங்களின் தவறான தகவல் யுத்தத்தில் தடுப்பூசிகளை பயன்படுத்தாதீர்கள். உயிர்களை காப்பது முக்கியம். தடுப்பூசிகளின் விலையைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News