செய்திகள்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

கொரோனாவால் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது - சிவசேனா சொல்கிறது

Published On 2021-04-28 19:30 GMT   |   Update On 2021-04-28 19:30 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை:

மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதையும் கொரோனா 2-வது அலை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நிதி தலைநகர் மும்பையில் பாதிப்பு அளவு சற்று குறைந்து வருகிறது. இதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனாவின் உக்கிரமான நிலை காரணமாக இந்தியா, சர்வதேச அளவில் அவதூறுகளை எதிர்கொண்டு வருகிறது.

பரவிவரும் தொற்றுநோயால் இந்தியா குறைந்தது 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் நாடு எந்தளவு முன்னோக்கி சென்றது என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளை இந்த நோய் சீர்குலைத்துவிட்டது. தற்போது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம் மட்டுமே மிஞ்சி உள்ளது. மீண்டும் எழுந்து நிற்க நாம் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்.

நாட்டின் தற்போதைய நிலை தீவிரமானது. போதுமான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் பாதிப்பு எண்ணிக்கை பெருகியுள்ளது.

ஆனால் மும்பை போன்ற ஒரு பெரிய நகரத்தில் இந்த எண்ணிக்கையானது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மும்பையை முன்மாதிரியாக கொண்டு மாற்ற மாநிலங்களும் செயல்படவேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News