செய்திகள்
பிரியங்கா காந்தி

உணர்வற்ற அரசே இதுபோன்ற அறிக்கையை அளிக்கும் - பிரியங்கா காந்தி

Published On 2021-04-26 18:22 GMT   |   Update On 2021-04-26 18:22 GMT
உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 38 ஆயிரத்து 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து இதுவரை 7 லட்சத்து 77 ஆயிரத்து 844 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.



ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உணர்வற்ற அரசு தான் இது போன்ற அறிக்கையை அளிக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக, உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்பது குறித்து இந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் வசதி இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறும் இடங்களில் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஆக்சிஜன் குறைவாக உள்ளது. உங்கள் நோயாளியை அழைத்துச் செல்லுங்கள். உணர்வற்ற அரசு தான் இதுபோன்ற அறிக்கையை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமானாலும், எனது சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டுமானாலும் அதை செய்துகொள்ளுங்கள். ஆனால், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து மக்களின் உயிரை உடனடியாகக் காப்பாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News