செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு -கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2021-04-25 07:57 GMT   |   Update On 2021-04-25 07:57 GMT
டெல்லியில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 24103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 26ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் தற்போதைய கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 3ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 



டெல்லியில் இதுவரை 10.04 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 24103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். 93080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து அரசுக்கு கடிதம் அனுப்புகின்றன. இதனால், ஆக்சிஜன் உபரியாக உள்ள மாநிலங்கள், டெல்லிக்கு அனுப்பி உதவி செய்யும்படி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News