செய்திகள்
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

பாகிஸ்தானில் இருந்து 2 ட்ரோன்கள் ஊடுருவல்- துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த இந்திய வீரர்கள்

Published On 2021-04-24 16:39 GMT   |   Update On 2021-04-24 16:39 GMT
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா செக்டாரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் 2 ட்ரோன்களின் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். 

பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்களும், சர்வதேச எல்லையைத் தாண்டி, ஜப்போவல், விக்ரம் எல்லை முகாம் அருகே இன்று இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது படைகள் உஷார்படுத்தப்பட்டன. 

அந்த ட்ரோன்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரண்டு ட்ரோன்களும் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றன. இதன்மூலம், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதிக்குள் அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறி உள்ளனர். 

2003 ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இருந்து உறுதி செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் எல்லைகளில் அமைதி நிலவுகிறது. இந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் ஆயுதங்களையும் போதைப்பொருட்களையும் இந்திய பகுதிக்குள் அனுப்புவதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. குறிப்பாக ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் தொடர்ந்து அத்துமீறுகின்றனர்.

ட்ரோன்கள் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பிச் சென்றதும், அப்பகுதியை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, ட்ரோன்கள் மூலம் ஏதாவது பொருட்கள் வீசப்பட்டுள்ளதா? என தேடினர். சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் அங்கு இல்லை. 
Tags:    

Similar News