செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருந்தால் உதவுங்கள்... பிற மாநிலங்களிடம் கேட்கும் டெல்லி அரசு

Published On 2021-04-24 14:00 GMT   |   Update On 2021-04-24 14:00 GMT
கொரோனாவின் தீவிரத்தன்மை காரணமாக, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் காரணமாக, மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளின் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. ஆக்சிஜன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்துவருகின்றன. எனினும் நிலைமை சீரடையவில்லை.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவி செய்ய வேண்டும். ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் டெல்லிக்கு அனுப்பி உதவுங்கள்’ என கூறி உள்ளார்.



மத்திய அரசும் எங்களுக்கு உதவுகிறது. என்றாலும் கொரோனாவின் தீவிரத்தன்மை காரணமாக, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ளனர். 24,331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளதால், சுகாதார கட்டமைப்பு கடும் நெருக்கடியில் உள்ளது.
Tags:    

Similar News