செய்திகள்
என்வி ரமணா

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி ஏற்பு

Published On 2021-04-24 08:29 GMT   |   Update On 2021-04-24 12:54 GMT
புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றார்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி எஸ்.ஏ. பாப்டே பதவி ஏற்றார். இவர் அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழக்கு விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்தினார். பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து, பாப்டே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

இது பற்றி கருத்து தெரிவித்த அவர், ‘‘சிறப்பாக பணியாற்றி திருப்தியாக ஓய்வு பெறுகிறேன்’’ என்று தெரிவித்தார்.



இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த எளிய விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்கும் வகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு புதிய நீதிபதி என்.வி.ரமணா பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.

புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வரை உள்ளது. அதுவரை பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க உள்ளார்.

Tags:    

Similar News