செய்திகள்
கோப்புபடம்

கேரளாவின் கண்ணூர் சென்டிரல் ஜெயிலில் ரூ. 1.94 லட்சம் பணம் கொள்ளை - சிறை துறை அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2021-04-23 10:38 GMT   |   Update On 2021-04-23 10:38 GMT
கேரளாவின் கண்ணூர் சென்டிரல் ஜெயிலில் ரூ. 1.94 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறைச் சாலை உள்ளது.

கண்ணூர் சென்டிரல் ஜெயில் வளாகத்தில் கைதிகள் நடத்தும் உணவு தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணூரில் உள்ள 8 மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் இந்த மையங்களில் வசூல் ஆகும் பணம் கண்ணூர் ஜெயிலுக்கு கொண்டு வரப்படும். ஜெயில் வளாகத்தில் உள்ள உணவு உற்பத்தி தொழிற்சாலையின் அலுவலக அறையில் வைக்கப்படும்.

கண்ணூர் ஜெயிலுக்கு நேற்று காலை உணவு ஆலையின் அதிகாரிகள் வந்த போது அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு அலுவலக மேஜை திறந்து கிடந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1.94 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கண்ணூர் ஜெயிலுக்குள் நடந்த இக்கொள்ளை பற்றிய தகவல் அறிந்து ஜெயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே இது பற்றி கண்ணூர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

ஜெயிலுக்குள் 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்கும். அதுவும் ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு ரோந்து சுற்றி வருவார்கள்.

அப்படியிருந்தும் ஜெயிலுக்குள் கொள்ளை நடந்தது எப்படி என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News