செய்திகள்
கோப்புபடம்

மேற்கு வங்காளத்தில் 500 பேருக்கு மேல் திரளும் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை - தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-04-23 09:08 GMT   |   Update On 2021-04-23 09:08 GMT
மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் விதித்துள்ளது.

புதுடெல்லி:

மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது.

அதன்பிறகு 1-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், 6-ந்தேதி 3-வது கட்ட தேர்தலும், 10-ந்தேதி 4-வது கட்ட தேர்தலும் நடந்தது. 5-வது கட்டமாக 45 தொகுதிகளுக்கு கடந்த 17-ந் தேதி தேர்தலும், நேற்று 6-வது கட்ட தேர்தலும் நடந்தது.

இதுவரை 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 கட்டங்களாக 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும். வருகிற 26-ந்தேதி 7-வது கட்டமாக 36 தொகுதிகளுக்கும் 29-ந்தேதி 8-வது கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் விதித்துள்ளது.

மேற்குவங்காள தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் 500 பேருக்கு மேல் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் தேர்தல் பிரசார பேரணி நடத்தவும், மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் பின்பற்றாத காரணத்தால் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் போதுமான இடம் இருக்கும் பட்சத்தில் 500 பேருக்கு கீழ் கூடும் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது. பிரசார பேரணி மற்றும் வாகன பேரணி நடத்த அனுமதி பெற்றிருந்தால் அந்த அனுமதி திரும்ப பெறப்படும் என்றும் தேர்தல் கமி‌ஷன் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தல் கமி‌ஷனின் உத்தரவை தொடர்ந்து மேற்குவங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜி தான் ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தார்.


பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த தனது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டார். 4 மாவட்டங்கள் மற்றும் 56 சட்டசபை தொகுதிகளில் 4 பேரணிகளில் பங்கேற்று பேச திட்டமிட்ட பிரதமர் மோடி இன்று மாலை மால்டா, முர்ஷிதாபாத், பிர்பம் மற்றும் கொல்கத்தா ஆகிய மக்கள் மத்தியில் மட்டும் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

Tags:    

Similar News