செய்திகள்
பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி

கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் பலி... பிரதமர், ராணுவ மந்திரி இரங்கல்

Published On 2021-04-23 04:06 GMT   |   Update On 2021-04-23 04:06 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதும், மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரில் விஜய் வல்லப் கொரோனா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 13 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். சிலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 21 நோயாளிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். சிறிது நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்றன.  ஏசி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் கூறி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்தினர். 



விராரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து துயரமானது என கூறி உள்ள பிரதமர் மோடி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி உள்ளார்.

மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்தது வேதனை அளித்ததாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News