செய்திகள்
தீவிர சிகிச்சை வார்டு தீயில் எரிந்து சிதைந்திருக்கும் காட்சி.

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 13 நோயாளிகள் பலி

Published On 2021-04-23 01:53 GMT   |   Update On 2021-04-23 05:11 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. நேற்று மட்டும் 67 ஆயிரம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 568 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. போதிய ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக இருக்கிறது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிர் இழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா தலைநகரம் மும்பைக்கு அருகே பல்கார் மாவட்டம் உள்ளது. இங்குள்ள விரார் நகரில் விஜய் வல்லாப் என்ற தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இங்கு கொரோனாவுக்காக சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர்.

90 கொரோனா நோயாளிகள் சிக்சை பெற்று வந்தார்கள். அவர்களில் உடல் நிலை மோசமாக இருந்த 16 பேர் தீவிர சிகிச்சை வார்டில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வார்டு 2-வது மாடியில் இருந்தது.

இன்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. அப்போது 2 நர்சுகள் மட்டும் பணியில் இருந்தனர். தீ பிடித்ததும் அவர்கள் வெளியே ஓடி வந்தார்கள்.

அதற்குள் வார்டு முழுவதும் தீ மளமளவென பரவியது. படுக்கையில் இருந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். ஏற்கனவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த அவர்களால் உடனே எழுந்து வெளியே ஓட முடியவில்லை.

அவர்கள் அனைவரையும் தீ சூழ்ந்துக் கொண்டது. மேலும் வார்டு முழுவதும் புகை பரவியது. அதில் சிக்கிக் கொண்ட 13 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிர் தப்பினார்கள்.

தீவிர சிகிச்சை வார்டு அருகே உள்ள மற்ற வார்டுகளிலும் கொரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தீப்பற்றியது பற்றி அறிந்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் வார்டு முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆஸ்பத்திரியில் ஆபத்தான கட்டத்தில் இருந்த சில நோயாளிகள் உள்பட 21 பேரை மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மீதி உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீப்பிடித்ததற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. அந்த வார்டில் ஏ.சி. எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீ விபத்தை நேரில் பார்த்த அவினாஸ்பட்டில் என்பவர் கூறும்போது, அதிகாலை 3 மணியை கடந்ததும் எனக்கு திடீரென ஒரு போன் வந்தது. எனது நண்பரின் மாமியார் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் எனக்கு போன் செய்தார்கள். ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து இருப்பதாக கூறினார்கள். உடனே நான் அங்கு விரைந்து சென்றேன்.



அப்போது ஆஸ்பத்திரி வார்டு எரிந்து கொண்டு இருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 30 நிமிடத்துக்கு பிறகுதான் தீ கட்டுக்குள் வந்தது. அப்போது தீயில் கருகி இறந்து கிடந்த 10-க்கும் மேற்பட்டோரின் உடல்களை எடுத்துச் சென்றதை நான் பார்த்தேன் என்று கூறினார்.

தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அகமதாபாத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். கடந்த மாதம் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இதே போல தீ விபத்து ஏற்பட்டு 11 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர் இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News