செய்திகள்
வேதாந்தா நிறுவனம்

ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் - வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2021-04-22 02:44 GMT   |   Update On 2021-04-22 02:44 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது மேல்முறையீடு மனு தொடர்பாகவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி கோரிய மனுவுக்கும் பதில் அளிக்க தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.



சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது எனவும், இடைக்காலமாக ஆலையில் பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் 2-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு, வழக்கமான கோர்ட்டு செயல்பாடுகளின்போது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

வேதாந்தா நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 18-ந்தேதி முறையிடப்பட்டபோது, அதன் மேல்முறையீட்டு மனு ஆகஸ்டு 17-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இந்தநிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்க மாநில அரசு போராடி வருகிறது. இந்த கஷ்டகாலத்தில் உதவிடும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள உற்பத்திக்கூடத்தில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க வேதாந்தா நிறுவனம் தயாராக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு உத்தரவுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தையும் இயக்க முடியாமல் மூடப்பட்டுள்ளது.

எனவே அதை இயக்கவும், உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை அருகில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு இலவசமாக வினியோகிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

மேலும், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும், இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News