செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் தினமும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி - மத்திய அரசு தகவல்

Published On 2021-04-22 02:33 GMT   |   Update On 2021-04-22 02:33 GMT
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவும் நிலையில், தினமும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவும் நிலையில், தினமும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று கூறியதாவது:-

‘நாங்கள் தினமும் 7,500 டன் ஆக்சிஜன் தயாரிக்கிறோம். மாநிலங்களுக்கு மருத்துவ தேவைக்காக தினமும் 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

மருத்துவ பயன்பாட்டுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கச் செய்யும் வகையில், மிகச் சில தொழிற்சாலைகள் தவிர, பிற தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் வினியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.

கொரோனா விஷயத்தில் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா என்னும் பெரிய சவாலை எதிர்கொள்ளும்போது, சில சமயங்களில் அச்சமும், குழப்பமும் ஏற்படலாம். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.’

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் விஷயமாக இருப்பதால், மாநில அரசுகளும், ஆஸ்பத்திரிகளும் ஆக்சிஜனை விவேகமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News