செய்திகள்
ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு

டேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Published On 2021-04-21 09:32 GMT   |   Update On 2021-04-21 12:28 GMT
டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாசிக்:

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமான அளவு அக்சிஜன் இல்லை. இதனால் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் உள்ள டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் டேங்கரில் திடீரென கசிவு ஏற்பட்டது. டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயு கசிவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும் இந்த விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கான ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால், 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி ராஜேந்திர ஷிங்னே கூறி உள்ளார்.
Tags:    

Similar News