செய்திகள்
மம்தா பானர்ஜி

புதிய தடுப்பூசி கொள்கை குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Published On 2021-04-20 19:03 GMT   |   Update On 2021-04-20 19:03 GMT
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், இது எந்த உள்ளடக்கமும் இல்லாத வெற்று அறிவிப்பாகவும், சிக்கலான நேரத்தில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகவும் தோன்றுகிறது.



ஏனென்றால், கடந்த பிப்ரவரி 24-ந்தேதி, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், மேற்கு வங்காள அரசே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு இலவசமாக வினியோகிக்க அனுமதி கோரி இருந்தேன். ஆனால் தங்களிடம் இருந்து பதில் வரவில்லை.

ஆனால், தற்போது கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு உச்சத்தை தொட்டிருக்கும்போது, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி அறிவிப்பில், தரமான, அதிக அளவிலான தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. எந்த விலைக்கு மாநில அரசுகள் வாங்க வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. இது, சிலர் கொள்ளை லாபம் ஈட்டவே உதவும்.

ஆகவே, மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வகையில், நேர்மையான, வெளிப்படையான தடுப்பூசி கொள்கையை பின்பற்ற வேண்டும்.

அனைவருக்கும் விரைவாக, கட்டுப்படி ஆகக்கூடிய விலையில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Tags:    

Similar News